இனி நமது உடல்கள் புதைக்கப்படமாட்டா; விதைக்கப்படும்!
கா. ஆறுமுகம்

நவம்பர் 25, 2007.
மலேசியாவின் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள்.

மாபெரும் எழுச்சிநாள்.

புறநானூற்றுக்கால புதல்வர்கள் இங்கும் உள்ளார்கள் என்று மார்தட்டவும் ஐம்பது ஆண்டுகளாகப் பதுங்கியது பயத்தால் அல்ல, பாய்வதற் குத்தான் எனக் கருத்துரைக்கவும் இந்நாள் வர லாற்றில் ஒரு வெற்றிக் கொடியை நாட்டியுள்ளது. சுமார் 50,000 மக்கள். சாதாரண மக்கள் என்றும் அவர்களைச் சூடு சொர ணை அற்றவர்கள் என்றும், அதிகாரத்திற்கும் அதட்டல் களுக்கும் அடிபணியும் கூட்டமென்றும், கூலிக் கூட்டமென வருணிக் கப்பட்டவர்கள்; வெகுண்டெழுந்த நாள். நமது மானமும் மரியாதையும் மீட்டெடுக்கப்பட்ட நாள்!

ஆம்; நாம் பெருமைப்படக்கூடிய நாள்தான் இது!

அரசு இயந்திரங்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சவில்லை. உரிமைகளைப் பறிக்கும் நீதிமன்றத் தடை உத்தரவுகளாலும் நம்மை தடுக்க இயலவில்லை. தலைவர்களின் மிரட்டல்களே நமக்குச் சவாலாக உருவாகின. போலீசாரின் கெடுபிடிகள், சாலை தடுப்புகள், மிரட்டல்கள் நமக்கு ஒருவகை எழுச்சியைக் கொடுத்தன. நம்மில் ஒவ்வொருவரும் நமக்குள்ளே மறைந்திருந்த அந்த விடுதலை வேட்கையின் தாக்கத்தால் உந்தப்பட்டுள்ளோம்.

பட்டதும் போதும்; கெட்டதும் போதும்; பொறுத்ததும் போதும்; பொறுமையும் போதும்.

ஐம்பது ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டோம். நமது நாட்டிலேயே நாம் ஒரு மூன்றாம்தர குடிமக்களாக உருவாக்கப்பட்டோம். அரசாங்க வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டன. உயர்கல்வி வாய்ப்புகள் குறைக்கப்பட்டன. பொருளாதார நிலையில் பலவீனமாகத் தள்ளப்பட்டோம். தோட்ட மக்களாக உடலுழைப்பு உறிஞ்சப்பட்ட நிலையிலே, நகர்ப்புற வறுமை நம்மை நடுத்தெருவில் நிறுத்தியது. பரம்பரையாக உடலுழைப்பை வழங்கும் பெரும்பான்மை சமூகமாக உருவாக்கப்பட்டு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டோம்.

தள்ளாடும் தமிழ்ப்பள்ளி களும் உடைக்கப்படும் கோயில்களும் நம்மை கதறவும் வைத்தன, கையே ந்தவும் வைத்தன.
 


இனவாதமும், சமய வாதமும் நமக்குச் சவாலா கவும் நமது மனிதநேய வாழ்வியலுக்குச் சாவு மணியாகவும் மாறின.

மலேசியா என்ற செல் வம் கொழிக்கும் இந்நாட் டில், சிறுபான்மையினர் என முத்திரை குத்தப்பட்டு, “இந்தியர்" என்ற இன அடையாளம் இடப்பட்டு, முசுலிம் அல்லாதவர் என்றும், பூமிபுத்ரா அல்லாதவர் என்றும் பிரிவினைக்கு ஆளாகி பிரிக்கப்பட்ட நிலையிலே, நம்மையறியாமல் நாமே நம்மை ஒரு பிரிவினராக அடையாளம் கொண்டு, அதனை நம்பியும், நம்ப வைக்கப்பட்டும், அதற்கேற்ற வகையிலே தோற்றத்தை உருவாக்கி, அதன்வழி ஓர் அடிமை கலாசாரத்திற்கு நமது அரசியல், சமூகப் பொருளாதாரச் சிந்தனைகளை அடிபணிய வைத்தோம். நாட்டின் குடிமகன் என்பதை இழந்து ஓர் இனத்தான் எனப் பெயர் கொண்டோம்.

மிகவும் சுலபமான முறையிலே பெரும்பான்மை இனங்கள் நம்மை தனிமைப்படுத்தின. சிறுபான்மை என்பதால் நமக்குப் பலமில்லை என்ற நியதி உணர்த்தப்பட்டது. சனநாயகம் என்பதை இனவாதங்கள் கூறுபோட்டன. மிஞ்சிய எலும்புத்துண்டுகளைப் போராடிப் பெறும் கூட்டமாகவும் நமது கட்சி அரசியலின் தலைமைத்துவமும் அதன் படிநிலை வளர்ச்சியும் உருவாகின.


இங்கு 20 இலட்சம் மக்கள், இந்நாட்டின் குடிமக்கள், ஒர் இனத்தின் அடையாளம், ஒரு மாறுபட்ட சமயத்தினர் என்பதால் தள்ளி வைக்கப்பட்டு வருகின்றார்கள்; ஒதுக்கப் பட்டும் ஓரங்கட்டப்பட்டும் வருகின்றனர். இந்த உண் மை நிலையை உணரும் நிலையில் இவர்களே இவர்களை கட்டுப்படுத் திக்கொள்ளவும், கட்டிப் போட்டுக்கொள்ளவும், பிரிவினைவாதக் கொள்கை களை அரசு நடைமுறை களாக்கி அவற்றையே அவர்களது வாழ்க்கையாக் கிவிட்டனர்.

நாளொன்றுக்குச் சுமார் ரிம 120 கோடியைப் பட்டுவடா செய்யும் இந்த பணக்கார நாட்டிலேயே, இன்னமும் தொடர்ந்து வறுமையில் வாட வேண் டிய அவசியம் யாருக்கும் கிடையாது.

இனம் என்ற வேறுபாட் டை வைத்து அரசாங்க வேலை வாய்ப்புகளில் புறக்கணிப்பு, தமிழ்ப் பள்ளிகள் என்பதாலும் அவற்றை மாற்றாந்தாய் பிள்ளைகள்போல் நடத்தப் பட்டன; இந்துக்கள் என்பதாலே கோயில்கள் உடைக்கப்பட்டன. இப்படி யாக உருவாக்கப்பட்டிருக் கும் நிலையில் நமது கோரிக்கைகளை நம்மால் உணர முடிகிறது; சுவாசிக்க முடிகிறது. இவற்றுக்கான தீர்வை நாம் கேட்கிறோம். அதற்கான ஓர் இலட்சியப் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். போராட்ட உணர்வுகளால் வடிவமைக்கப்பட்ட இந்த தார்மீகப் பயணம் இனியும் வழி தவறாது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்; மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டும். இந்தப் பயணத்தின் திசை காட்டும் கருவிகளாக நமது சிந்தனைகள் செப்பனிடப்பட வேண்டும்; செயல்பட வேண்டும்.

இதுநாள்வரை நாம் நடந்து வந்த பாதையில் நாம் கண்டவை இனவாதமும் மதவாதமுந்தாம். இவ்வாறான பிரிவினைகளை நாம் களையெடுக்க வேண்டும் என்பதற்காக அதே பாதையில் நமது பயணத்தைத் தொடர இயலாது. நாம் நமது இன அடையாளத்தையும், மொழி, கலை, பண்பாடு, சமய அடையாளங்களை யும் கவசமாக கொண்டு மனிதநேய மேம்பாட்டில் மேன்மையுற ஒரு புதிய பாதை வேண்டும். அதைத் தேட வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கு மட்டுமல்ல, இந் நாட்டில் உள்ள அனைத்து இனங் களுக்கும் மதங் களுக்கும் உண்டு.

இதற்குப் பரிகாரமாகத் தேசிய இனம், தேசிய மதம் போன்ற பழைய பல்லவிகள் பயன் அளிக்கா.

இன, மொழி, சமய பண்பாட்டு அடையாளங்கள் மனித வாழ்வியல் நிலைகளில் - ஆழப்பதிந்து விட்ட நிலையில், அவற்றுக்கான அங்கீகாரம் அடிப்படை உரிமைகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அரசாங்கத்தின் கொள்கை கள், சட்டங்கள், அமுலாக்க முறைகளில் இவை பிரதிபலிக்க வேண்டும். இந்நாட்டின் வளர்ச்சியில், இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனின் உரிமையும் நிலை நிறுத்தப் பட வேண்டும்; காக்கப்பட வேண்டும்; உறுதி செய்யப் பட வேண்டும். இந்நாட் டின் வளங்கள் நம் ஒவ்வொருவரின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்நிலை தவிர்த்து வேறு எதையும் நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. அடிப்படையில் நமது நிலைப்பாடு, நமது நாடு, நாம் இந்நாட்டு மக்கள், சுதந்தர மனிதனாக மேம்பாட்டுக் கான உரிமைநிலை எல்லாருக்கும் உண்டு என்பதேயாகும்.

நவம்பர் 25, 2007.

“நாமும் இந்நாட்டு மக்கள்" என்ற பிரகடன நாள்!

இனி நமது உடல்கள் புதைக்கப்படமாட்டா;
அவை விதைக்கப்படும்!

© 2007  செம்பருத்தி பதிப்பகம், கோலாலம்பூர்   -    இயக்கம் : மொழிநெட்   -  semparuthi@gmail.com