தமிழ்ப்பள்ளி மாணவர்களைக் கொல்லும் 7A உயிர்க்கொல்லி

ஜா. சுகிதா

 

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் யு.பி.எஸ்.ஆர். (UPSR) தேர்வில் 7Aக்கள் பெற வேண்டும்; சாதனை படைக்க வேண்டும். இந்த 7Aக்களைப் பெறுவதில்தான் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்றும் தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்காலமே இருக்கிறது என்று டமாரம் அடிக்கப்படுகிறது.

அமைச்சர்கள் முதல் ஆண்டிகள் வரை ஓதும் மந்திரம் 7Aக்கள். ஒரு தமிழ்க் குடும்பத்தின் மானம், மரியாதை, கௌரவம் எல்லாம் 7Aக்களுக்குள் அடங்கியிருக் கின்றன என்ற தோற்றம் உருவாக் கப்பட்டுள்ளது. 7Aக்களா அல்லது உயிரா? இன்று, இந்த 7Aக்கள் உயிரைப் பறிக்கும் உயிர்க்கொல்லி யாக உருவாகியிருக்கின்றன!

கள்ளம் கபடமற்ற புன்னகை பூத்த முகவழகை கொண்ட சுபாஷினி, வளர்ந்து வாழ்ந்து காட்ட வேண்டிய பன்னிரண்டே வயதான சுபாசினி, இந்த 7A உயிர்க் கொல்லிக்குப் பலியானார்.

இதற்கு முன், ஒரே ஒரு பாடத்தில், மலாய் மொழியில், தேர்ச்சி பெறத் தவறிய இலட்சுமி உயிர் துறந்தார்.

இந்த 7A உயிர்க்கொல்லி தமிழ்ப்பள்ளி மாணவர்களைத் தற்கொலை மேடைக்குக் கொண்டு செல்வதோடு நின்று விடுவதில்லை. பல மாணவர்களையும் அவர்களின் பெற்றோர் களையும் உறவினர்களையும் நண்பர்களையும் இந்த 7A உயிர்க்கொல்லி கொல்லாமல் கொன்று கொண்டிருக்கிறது.

7A உயிர்க்கொல்லியின் கொடூரம் யு.பி.எஸ்.ஆர் தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகுதான் தென்படுகிறது என்பதில்லை. யு.பி.எஸ்.ஆர் வகுப்பில் நுழைவதற்கு முன்பே 7A உயிர்க்கொல்லியின் கொடூரம் சம்பந்தப்பட்ட அனை வரையும் - மாணவர்கள், பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரிய ர்கள், அரசு சார்பற்ற அமைப்புகள், அரசியல் கட்சித் தலை வர்கள், சமூக அமைப்புகள் - ஆட்கொள்கிறது. இந்த 7A உயிர்க் கொல்லியின் தாக்கம் அனைவரையும் கடும் மனக்கலக த்திற்கு இட்டுச் சென்றுள்ளது.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 7A பெற்றாலன்றி அவர்களுக்கு வளமான எதிர்காலம் இல்லை. ஆக, 7A தான் அவர்களின் உயிர். 7A கிடைக்கவில்லை என்றால் தற்கொலை என்ற நிலை உருவாக் கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் பின் தள்ளப்பட்டுள்ள பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய 7Aயைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவிற்குக் கொண்டுவரப் பட்டுள்ளனர்.

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் தங்கள் பள்ளிகளின் மாணவர்கள் 7A பெற்றால்தான் பெருவாழ்வு வாழ முடியும் என்று யார் யாரோ கூறியதை நிருபிக்கும் நோக்கத் தோடு போட்டிப் போட்டுக்கொண்டு மாணவர்களைத் தயார் செய்கின் றனர்.

எல்லாருக்கும் 7A வேண்டும். அதுதான் இலக்கு. இந்த இலக்கை அடைய விரும்பும் சமுதாயத்திற்கு மாணவர்களின் விருப்பு வெறுப்பு குறித்த சிந்தனை கிடையாது. மாணவர்கள் சமுதாயத்தின் கட்டளைக்கு அடிபணியும் கருவிகளேயன்றி வேறு எந்தத் தகுதியும் அற்றவர்கள்.

இந்நிலை யு.பி.எஸ்.ஆர் தேர்விற்குப் பயிலும் மாணவர்களை, குறிப்பாக இந்திய மாணவர்களை, மட்டும் சார்ந்த ஒன்றல்ல.

எஸ்பிஎம் மற்றும் எஸ்டிபிஎம் போன்ற தேர்வுகளுக்கான மாணவர்களும் இந்த நேரடி A பெற வேண்டும் என்ற தாக்கத்திற்கு, கொள்கைக்கு, உட்படுத்தப்பட்டுள்ளனர். நேரடி 12A, 14A, 18A, பெறுவதற்கு மாணவர்கள் தூண்டப்படுகின்றனர். பலவகைகளில் இந்தக் கூடுதல் Aக்கள் பெறுவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படுகின்றன.

இவ்வாறு கூடுதல் Aக்கள் பெறுவதால் மாணவர்கள் அறிவு வளர்ச்சி பெறுகின்றனரா? அந்த வளர்ச்சி தொடர்கின்றதா? இந்தக் கூடுதல் Aக்கள் பெறுவதற்கான கடும் போட்டியில் இவ்வாறான கேள்விகளுக்கு இடமில்லை. சமுதாயம் வேண்டும் என்று கருதிய ஒன்றை அடைவதற்கு மாணவர்கள் கருவிகளாக்கப்பட்டுள்ளனர். சமுதாயம் நிருணயித்த இலக்கை அடையாதவர்கள் சுபாசினியின் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

கல்வியமைச்சரே பொறுப்பு?

சமுதாயம் நிருணயித்த 7, 10, 12, 14 மற்றும் 18 Aக்களை பெற்றவர்களுக்குச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கொடுப்பவர்களின் மனப்போக்கிற்கேற்ப ஏதோ வெகுமதிகள் வழங்கப்படுகின்றன. இவ்வெகுமதிகள் Aக்களை பெற்ற அனைவருக்கும் கிடைப்பதில்லை என்பதை ஞாபகத்தில் கொள்ளத் தவறக்கூடாது. இதிலும் ஏமாற்றம் உண்டு என்பதையும் மறந்து விடக்கூடாது.

மாணவர்களுக்கு இலக்கை நிருணயித்த சமுதாயத்தினர், இலக்கை அடைவதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பல்வேறு வெகுமதிகளை நிருணயித்த சமுதாயத்தினர், இலக்கை அடையத் தவறியவர்கள் இருப்பார்கள்; அவர்களின் நிலையை எவ்வாறு கையாள்வது?; விபரீதங்கள் ஏதும் நடவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பன போன்றவற்றுக்குத் திட்டம் வகுத்திருக்க வேண்டும். மேலும், அறிவு வளர்ச்சிக்கு வித்திடாமல் வெறும் சாதனை படைக்கும் நோக்கத்தைக் கொண்ட கல்விக்கொள்கை ஏற்புடையது தானா என்பதை நிருணயித்திருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட எதிலும் ஈடுபாடில்லாமல், “உலகத்தரம்” என்ற மாயையை விரட்டிப் பிடிக்கும் கல்விக் கொள்கையால் ஏற்பட்ட விளைவுதான் சுபாசினியின் தற்கொலைப் பயணம்.

7Aக்கள் பெறாமல், 4B, 2C, மற்றும் 1D பெற்ற சுபாசினி, சமுதாயத்தின் எதிர்பார்ப்பை, சமுதாயம் நிருணயித்திருந்த இலக்கை, தேசியக் கல்விக்கொள்கை வரைந்திருந்த எல்லையை, அடையத் தவறியதால், தனது தோல்விக்கு விலையாக தன் உயிரைத் துறந்தார்!

சுபாசினிக்கு ஏற்பட்ட கதிக்கு யார் பொறுப்பு? சுபாசினி ஒரு மாணவி. அந்த மாணவிக்குத் தாங்கொணாத் துயரத்தை, மன உளைச்சலைத் தந்தது யு.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள். யு.பி.எஸ்.ஆருக்கான போதனை, தேர்வு மற்றும் முடிவுகளுக்கு அடிப்படை யானது தேசியக் கல்விக் கொள்கையாகும். அக்கொள்கையை உருவாக்கி அமலாக்கம் செய்வது கல்வியமைச்சாகும். ஆக, சுபாசினியின் தற்கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டிய முதல் நபர் கல்வியமைச்ச ராகும்.

இன்று அமலாக்கம் செய்யப்படும் கல்விக் கொள்கையின் விளைவாக மாணவர் களின் மன உளைச்சல் கடந்த நான்கு ஆண்டுகளில் 300 விழுக்காட்டிற்கு மேலாக அதிகரித்திருப்பதாக அறிவிக் கப்பட்டுள்ளது என்று சுபாசினியின் மரணம் குறித்து டான்ஸ்ரீ லீ லாம் தாய் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள் ளார்.

கல்வியமைச்சரை அடுத்து ஆளும் அரசியல் கட்சிகளின், குறிப்பாக மஇகாவின், தலைவர்கள் சுபாசினி மரணத்திற்கும் அதிகரித்து வரும் மாணவர்களின் மன உளைச்சலுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

7Aக்களைப் பெறும் மாணவர்களுக்கு மட்டும் முன்னிலை அளித்து, அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கி, பாராட்டுகள் தெரிவித்து, பரிசுகள் வழங்கும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் மற்றும் EWRF போன்ற அமைப்புகளும் 7Aக்கள் பெறாத மாணவர்கள் அடையும் மன வேதனைகளுக்கும் சுபாசினி போன்ற மாணவிகளின் தற்கொலைக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

மேலும், தங்கள் குழந்தைகள் தேர்வுகளில் Aக்களை எடுத்துக் குவிக்க வேண்டும் என்பதற்காக வசதிபடைத்த பெற்றோர்கள் ஆயிரக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து டியூசன் வகுப்புகளுக்கு ஏற்பாடுகள் செய்கிறார்கள். தங்களின் குழந்தைகள் பெறும் ஒவ்வொரு Aக்கும் ரிம 500 அல்லது ரிம 1000 அல்லது அதற்கும் மேலாக வழங்கி ஊக்குவிக்கிறார்கள். இந்த அளவிற்கு ஊக்குவிப்பு இருந்தும் அனைத்து மாணவர்களும் 7Aக்கள் பெறுவதில்லை. 7Aக்கள் பெறாதவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள்; கண்ணீர் விட்டு அழுகிறார்கள்.

வசதியற்றவர்களின் குழந்தைகளை டியூசன் வகுப்புகளுக்கு அனுப்புவதற்கு அவர்கள் படும் அவதியை என்னவென்று கூறுவது? இக்குழந்தைகளெல்லாம் எப்படி 7Aக்கள் பெற முடியும்? தங்களது சக மாணவர்கள் 7Aக்கள் பெற்று ஆனந்தக் கூத்தாடும்போது இந்த ஏழை மாணவர்கள் எவ்வளவு பெரிய மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறார்கள்?

இந்த 7A உயிர்க்கொல்லியின் வளர்ச்சிக்குப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரும் பொறுப்பேற்க வேண்டும்.

7Aக்கள் பெற்ற மாணவர்களின் ஆனந்தக் கூத்துகளையும் அவர்களின் பெற்றோர்கள் வழங்கும் “அன்பு” முத்தங்களையும் வண்ணப் படங்களாகப் பிரசுரித்து சாதனைச் செய்திகளாக வெளியிடும் தினசரிகளும் தோல்வியினால் துவண்டு மன உளைச்சளில் சிக்கித் தவிக்கும் அல்லது தற்கொலை மேடையேறும் மாணவர்களின் நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

சாமிவேலுக்கு 7A?

7Aக்கள் பெற்றால்தான் கல்வியில், வாழ்க்கையில் பெற்றிபெற முடியும் என்று நிருபித்துக் காட்டியவர் யார்? 7Aக்கள் அல்லது 18Aக்கள் பெறாதவர்கள் வெற்றி பெற முடியாது என்று நிருபித்தவர் யார்?

இந்த நாட்டில் திடீரென்று இந்த Aக்கள் வெறியை உருவாக்கியிருக்கிறார்கள். அதுவும் மலாய் மாணவர்கள் 7Aக்களை வாங்கித் தள்ளுகிறார்கள், அவர்கள் மற்ற இன மாணவர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர் என்றும் கூறிக்கொள்கிறார்கள். அதனைக் காட்டிக் கொள்வதற்காகப் பலவிதமான விளம்பரங்களைச் செய்கிறார்கள். தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஒரு மாணவி 18Aக்கள் எடுத்துவிட்டார் என்று பதாகைகள் வழி விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பர வெறிக்கு எல்லையே கிடையாதுபோல் தோன்றுகிறது. லெய்க்கா என்ற இரஷ்ய நாய் விண்வெளிக்குச் சென்று திரும்பிய பின் விண்வெளிப் பிரயாணம் ஒரு சாதாரணச் செயலாகிவிட்டது. ஆனால், இங்கு ஒருவர் விண்வெளி சுற்றுப்பயணியாகச் சென்று திரும்பியதற்கு அளிக்கப்பட்டிருக்கும் பிரமிக்க வைக்கும் விளம்பரங் களுக்கான செலவைக் கொண்டு பல தமிழ்ப்பள்ளிக் கூடங்கள் கட்டிவிடலாம்! தேவையற்ற விளம்பரங்களால் விபரீதங்கள் ஏற்படும். சுபாசினிக்கு ஏற்பட்ட துன்பம் இந்த 7A உயிர்க்கொல்லிக்குக் கொடுக்கப்பட்ட விளம்பரங்களின் விளைவுகள்தாம்.

மாணவர்கள் 7Aக்கள் பெற வேண்டும்; அதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறும் தலைவர்கள் எல்லாம் 7Aக்கள் பெற்றவர்கள் அல்லர். சாமிவேலு எத்தனை Aக்கள் பெற்றிருந்தார்? மகாதீர் எத்தனை Aக்கள் பெற்றிருந்தார்? சமீபத்தில் காலமான கெந்திங் மலை தங்கும் விடுதிகளின் உரிமையாளர் உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவருக்கு Aக்கள் இருந் தனவா? Aக்கள் மட்டும் ஒரு மாணவர் வாழ்க்கையில் அடையும் வெற்றி அல்லது தோல்வியை நிருணயிப் பதில்லை என்பது ஆசிரியர்கள் மற்றும் தலைவர்கள் அறிந்த ஒன்றே. இருப் பினும், வெறி என்ற ஒன்று அவர்களை ஆட்கொள்ளும்போது சீர்தூக்கிப் பார்க்கும் சிந்தனையற்ற வர்களாகி விடுகிறார்கள். அவர்கள் இழைக்கும் அந்த தவறுக்குச் சுபாசினியின் உயிர் விலையாகி விடுகிறது.

புதிய சிந்தனை தேவை

முதல் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் வரை சென்று கல்விகற்கும் ஒவ்வொருவரும் மாணவரே. மாணவர் பருவம் அழகானது, அற்புதமானது. அவர்களின் உலகம் தனிரகமானது. மாணவர்களுக்கே உரிய அந்த அட்டகாச, ஆர்ப்பாட்ட, துள்ளி விளையாடும், வேட்டையாடும், வாழ்க்கையை ஒவ்வொரு மாணவரும் அணுவணுமாக அனுபவிக்க வேண்டும். எக்காரணத் திற்காகவும் மாணவர்களின் தனித்தன்மையை, இயற்கையான வளர்ச்சியை, ஈடுபாடுகளை அழிக்க முயலக்கூடாது.

மாணவர்களிடையே குறைகள் காணப்படுகின்றன என்றால், வன்செயல்கள் தோன்றுகின்றன என்றால், தவறான போக்குகளும் நடத்தைகளும் அவர்களை ஆட்கொள்ளுகின்றன என்றால், மாணவர்களின் இச்செயல்களுக்கெல்லாம் முன்னோடியாய் இருப்பவர்கள் வயது வந்தவர்களே.

ஒரு மாணவனின் ஏற்றுக்கொள்ள இயலாத செயலுக்கு பின்னால் ஒரு வயது வந்தவர் இருக்கிறார். சுபாசினியின் தற்கொலைக்கு முன்னோடிகள் வயது வந்தவர்கள். மாணவர்கள் சிகரெட் புகைப்பதற்கு, மது அருந்துவதற்குப் பின்னால் இருப்பவர்கள் வயது வந்தவர்கள். சிகரெட் மற்றும் மதுபான உற்பத்தியை அனுமதிக்கும் வயது வந்தவர்கள்தாம் குற்றவாளிகள். மாணவர்கள் சாலையில் ஒழுங்காக நடந்துகொள்வதில்லை என்றால், சாலையை உபயோகப்படுத்தும் வயது வந்தவர்களின் தகாத நடத்தைகள்தாம் காரணம். பள்ளிக்கூடம் கலையும் நேரத்தில் மாணவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகப் பள்ளிக்கூடத்திற்கு வரும் வயது வந்தவர்கள் அவர்களின் வாகனங்களை எப்படியெல்லாம் நிறுத்திவைத்து முன்னுதாரணமாக இருக்கிறார்கள்? ஒவ்வொரும் வெள்ளிக்கிழமையும் வண்டிகள் எவ்வாறு நிறுத்தி வைக்கப்படுகின்றன? தைப்பூசத்தன்று வயது வந்த பக்தர்கள் எவ்வளவு கட்டொழுங்குடன் நடந்து கொள்கின்றனர்? ஆபாசமான சினிமாப் படங்கள் எடுப்பவர்கள் யார், யார்? மாணவர்களா அல்லது வயது வந்தவர்களா? சிவாஜியை இங்கு கொண்டுவந்து மாணவர்களுக்கு விருந்தளித்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்களா அல்லது வயது வந்தவர்களா?

போதிக்கத் தகுதியற்ற விரிவுரையாளர்களையும் பேராசிரியர்களையும் நியமிப்பது மாணவர்களா அல்லது வயது வந்தவர்களா?

பசியோடு பள்ளிக்கு வரும் மாணவர்கள், கழிவறையற்ற பள்ளிகள், மாணவர்களின் தகாதச் செயல்கள், இவற்றுக்கெல்லாம் பின்னால் இருப்பவர்கள் வயது வந்தவர்கள்தாமே!

மாணவர்களுக்குத் தொல்லைகள் தருபவர்கள் வயது வந்தவர்கள். மாணவர்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்குகிறவர்கள் வயது வந்தவர்கள். மாணவர்களின் இயல்பான சக்திக்கு அப்பாற்பட்டதை அவர்களின் மீது திணிப்பவர்கள் வயது வந்தவர்கள். மாணவர்களைப் போட்டியிட வைத்து அவர்களின் அமைதியான, மகிழ்ச்சி நிறைந்திருக்க வேண்டிய வாழ்க்கையை அழிப்பவர்கள் வயது வந்தவர்கள். நிலையற்ற கல்விக் கொள்கை, பள்ளிகளில் இனவாதக் கொள்கை பரப்புதல், என்ன படித்துத்தான் என்ன பிரயோசனம் என்ற எண்ணம் மாணவர்களிடையே எழுதல் போன்றவற்றுக்குக் காரணம் வயது வந்தவர்களே.

இந்நாட்டில் இன்றைய மாணவர்களுக்குக் கனடா என்ற நாடு எங்கிருக்கிறது என்று தெரியாது என்று இந்நாட்டு கல்விக் கொள்கைக்குச் சான்றுதல் வழங்கியுள்ளார் நிறை நிலைப் பேராசிரியர் கூ கே கிம். இந்நிலைக்குப் பொறுப்பு வயது வந்தவர்களே.

மகிழ்ச்சி நிறைந்த, கல்வி அறிவைத் தானாகத் தேடிச் செல்லும், தேர்வுகளைப் புன்னகையுடன் எதிர்நோக்கும், மாணவர் உலகத்தை உருவாக்க வயது வந்தவர்கள் தங்களின் வக்கிர புத்திகளை மாற்றிக் கொள்
ள வேண்டும். இல்லையேல் இன்னும் பல சுபாசினிகளை நாம் இழக்க நேரிடும்.
 

© 2007  செம்பருத்தி பதிப்பகம், கோலாலம்பூர்   -    இயக்கம் : மொழிநெட்   -  semparuthi@gmail.com