இந்தியர்களின் விரக்தியும் அரசாங்கத்தின் மிரட்டலும்

கா. கலைமணி

 

கடந்த ஒரு வாரமாக (25.11.2007 முன்), போலீசாரால் எச்சரிக்கப்பட்டும், பிரதமர், துணைப்பிரதமர், இளைஞர் பண்பாட்டுத்துறை அமைச்சர் - இப்படிப் பலரால் மறைமுக மிரட்டல் விடப்பட்ட பிறகும் இந்து நடவடிக்கைக் குழுவின், நினைவூட்டல் குறிப்பை (Memorandum) பிரிட்டீஷ் தூதரகத்தில் ஒப்படைக்கும் நோக்கம் தடுக்கப்பட்டாலும், நாடு முழுவதும் உள்ள இந்தியர்களில் சுமார் 1 இலட்சத்திற்கு அதிகமானவர்களை ஒன்றுகூட வைத்திருக்கிறது.

சமயத் திருவிழாக்களைத் தவிர்த்து, மலேசிய வரலாற்றிலேயே இந்தியர்கள் கூடிய, அதுவும் இந்த 50வது சுதந்தர விழாவைக் கொண்டாடிக் கொண்டிக்கும் இவ்வேளையில் மலேசிய இந்தியர்களின் விரக்தியைக் வெளிப்படுத்திய கூட்டமிது.

வந்தவர்கள் தெரு ஆர்ப்பாட்டத்திற்கோ, அல்லது கலவரத்தை உண்டாக்கவோ கூடவில்லை.

கடந்த 50 ஆண்டுகளாக, இந்தச் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்டுவரும் அநீதியை எதிர்த்து, அதற்குக் காரணமே பிரிட்டீஷ் அரசாங்கந்தான் என்ற ஆதாரங்களோடு கொடுக்கப்படவிருந்த குறிப்பு அது.

தாய்மொழிக் கல்வி கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. தமிழ்ப்பள்ளிகள் (திட்டமிட்டு) அழிக்கப்பட்டு வருகிறது. முன்பு 888 பள்ளிகள் தற்பொழுது 523 பள்ளிகள்.

அரசாங்க வேலை வாய்ப்புகள், பதவி உயர்வுகள், குத்தகைகள் - இப்படி எல்லாவற்றிலும் அடி மட்டத்திற்குக் கொண்டு வந்துவிட்டது, இந்த அரசாங்கம்.

நாம் நம்பியிருந்த மஇகாவும் எந்த நோக்கத்திற்காக நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர்களின் குரோனிகள் கொட்டமடித்துக் கொண்டிருக்கிறார்கள். கேள்வி கேட்பவர்களை வெட்டி சாய்க்கவும் செய்கிறார்கள்.

பொருளாதாரத்தில் உயர்த்துகிறேன் என்றவர்கள், தாங்களும், தங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். நமது உரிமைகளைக் கேட்டால் பிரதமரிடம் பேசி விட்டேன், அவர் பார்த்துக்கொள்வார் என்று சொல்லியே இன்றுவரை காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

எழுச்சி அடைய வேண்டிய இளைஞர் அணி திசை மாறியிருக்கிறது.

நமது வாரிசுகளின் எதிர்காலத்தை நினைத்தால் மனமே இருண்டுவிடுகிறது.

கோரிக்கைகளை விடுப்பதற்குத் தெரு ஆர்ப்பாட்டம் தேவையில்லை; அது நமது கலாச்சாரமும் அல்ல. உண்மைக்கும் நேர்மைக்கும் நன்றிக்கும் பேர்போன இந்த இனந்தான் இன்று, விரக்தியைச் சொல்ல வீதிவரை வந்துள்ளது.



 

இந்தக் கூட்டத்தைக் கூட்டியது எதிர்க்கட்சிகளின் சதித்திட்டம். இதன் ஏற்பாட்டாளர்கள் அவர்களிட மிருந்து பல இலட்ச ரிங்கிட்டுகளைப் பெற்றுக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று ஒரு சாரார் குற்றம் சாட்டிக் கொண்டிருக்க கடந்த 23.11.2007 மஇகா தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டத்தோ செனட்டர் சரவணன் கோமாளிகள் என்று பட்டம் கொடுத்துவிட்டார்.

உண்மைதான் கோமா ளிகளுக்கு இலட்சம் இலட்சமாகப் பணம் வருவது உண்மையானால் அஞ்சலில் துப்பாக்கி இரவையையும் சேர்த்து ஏன் அனுப்பி வைப்பானேன்.

இழந்து கொண்டிருக் கும் உரிமைகளை மீட்டுக் கொடுக்க உங்களுக்கு வக்கு இல்லாததால்தான் இன்று சந்தி சிரிக்கும் நிலை வந்தது.

 

கோரிக்கை மனுவை (மகஜர்) கொடுப்பதற்கு நாலைந்து பேர் போதும், தெரு ஆர்ப்பாட்டம் தேவையில்லை என்று வலியுறுத்துகிறீர்களே, உங்கள் வழியிலேயே உங்களுக்கு ஒரு கேள்வி? இந்நாட்டு இந்தியர்களைப் பிரதிநிதிக்க மஇகா அல்லது மற்ற இந்திய கட்சிகள் எதற்கு? எங்கள் குறைகளை அரசாங்கத்திற்கு எடுத்துச் செல்ல நீங்களும் டத்தோஸ்ரீயும் போதாதா? எதற்கு மஇகா என்ற பந்தா? ஒரு கை தட்டினால் ஓசை எழும்பாது என்ற அரிச்சுவடை அறியாதவர்களா நீங்கள். இந்த சமுதாயத்தில் எத்தனையோ சிறந்த நிபுணர்கள் இருக்க நான்கு சுவருக்குள் தங்களே இயற்றிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் எத்தனையோ கோரிக்கை மனுக்களைப் பிரதமரிடம் கொடுத்து விட்டேன் (உண்மைதானா?) என்கிறீர்களே அதற்கெல்லாம் பலன் கிடைத்ததா? நிலைமை அளவுக்கு மீறி போனதால்தானே இவை மஇகாவின் கைத்தொலைபேசி எண்கள் குறுஞ்செய்தி வழியாக நாடு முழுவதும் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

விரக்திகளின் எல்லைக்கே சென்றுவிட்ட இந்த சமுதாயத்தில் செயல் தேச நிந்தனை என்றும், அதனால் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (இசா) பாயும் வாய்ப்பும் உண்டு எனவும் பிரதமர் மிரட்டுகிறார்.

இது இன்னொரு வகையான பொறுப்பற்ற கூட்டம் என்று திரு தேவமணி அல்ஜீரா தொலைக்காட்சியின் நேரடிப் பேட்டியில் 25.11.2007 அன்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க, அமிலம் கலந்த நீரையோ, கண்ணீர்ப் புகையையோ பயன்படுத்தப் படவில்லை என்று போலீஸ் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் தெருவில் இறங்கினேன் என்றால் 50 ஆயிரம் பேரைத் திரட்ட முடியும் என்று இன்னுமும் நம் சாதனைத் தலைவர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்.

நமக்கு இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளைப் பல வகையில் எடுத்துச் சொல்லியும் பல கோரிக்கை மனுக்களை வழங்கியும் எந்தப் பலனும் இல்லாத போதுதானே, இந்த நிலை வந்தது.

சில மாதங்களுக்கு முன் பிரதமரின் மருமகன் திரு. கைரி அவர்கள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலீஸா அவர்கள் இந்நாட்டிற்கு வருகை தந்தபோது கோலாலம்பூர் இரட்டை கோபுரத்தில் (கேஎல்சிசி) ஆர்ப்பாட்டம் நடத்தினாரே, அது சரியா?

11 ஆவது மாதம் பெர்சே குழுவினர், இந்நாட் டின் தேர்தல் அமைப்பில் அதிருப்தி கொண்டு பெரிய ஊர்வலத்தோடு மாமன்னரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தார்களே அது தேச நிந்தனை இல்லையா?

ஏழைகளின் (மலாய்க்காரர்கள்) பொருளாதாரத்தை மேம்படுத்தப்பட்ட திட்டங்களில் பல பெல்டா திட்டங்களை அமைத்து இரண்டு இலட்சம் மக்களுக்குச் சராசரி 10 ஏக்கர் நிலச் சொந்தக்காரர்களாக்கி, அதே இடத்தில் சில மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கி பல ஆயிரம் பேரை திடீர் பணக்காரர்களாக்கிய பலன், அதில் பயன் அடைந்த மக்களில் 80 விழுக்காட்டினர் பாஸ் கட்சி ஆதரவாளராக மாறி இந்த அரசாங்கத்திற்கு எதிராகத் திரண்டுள்ளனரே இது நன்றி கெட்டதனமில்லையா?

பலவிதமான அடக்கு முறையில் இந்த இனம் ஒடுக்கப்பட்டிருந்தும், தேர்தலின்போது பிளவுப்படாத ஆதரவை வழங்கவில்லையா.

அதனால் தானே இந்த நன்றியுள்ள இனம் எதைச் செய்தாலும் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கும் என்ற எண்ணத்தில் நிலைமை கட்டுக் கடங்காமல் போனது.

அம்னோ ஆதரவுகொண்ட ஆங்கில தினசரியில் (N.S.T.) 25.11.2007 நடந்த பேரணியின் நியாயத்தைப் புரிந்து கொண்டது.

சமயத்தில் கைவைத்த போதுதான் இந்த இனத்திற்கே புத்தி வந்துள்ளது. இது சம்பந்தமாகப் பிரதமரிடம் புத்ரா ஜெயாவில் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது.

அங்கும் இதே ஆதரவாளர்கள், குறைவான கூட்டம். அதே ஆதங்கம், அதே பேரணி எந்தவொரு அசம்பாவிதமும் எழவில்லை. ஏன் என்று யோசித்துப் பார்த்தீர்களா?

இங்கும் அதே நோக்கந்தான். ஆனால் கோரிக்கை மனுவைப் பெற வேண்டியவர் பிரிட்டீஷ் தூதரகத்தினர். ஆனால் கொடுக்க முடியாத அளவிற்குத் தடுப்புகள், அமில நீர் வீச்சுகள், கண்ணீர்ப் புகைகள் - கலகத் தடுப்புக்காரர்கள் ஏன் தடுத்தார்கள் என்று கேட்டால் மேலிடத்து உத்தரவு என்கிறார்கள்.

அமைதியாக முடிய வேண்டிய பேரணியை எவ்வித ஆயுதம் இல்லாதவர்களை நோக்கி இந்த அரசாங்கம் தவறான முடிவை எடுத்துள் ளது, இன்று உலகம் முழுவ தும் தெரிந்துவிட்டது. அதுவும் ஆண்டவன் சன்னதியிலும் முன்பக்க கதவை பூட்டிவிட்டு அராஜகம் நடத்தப்பட்டது.

இதற்கு அமரர் க. சிவலிங்கத்திற்குத்தான் நன்றி கூற வேண்டும். இவரின் தந்தையார் கட்டியக் கோ யில். இவர் உயிருடன் இருந்தவரை பிரச்னை இல்லை. இவர் இறந்ததும் கோயிலை உடைத்தார்கள். காக்க வேண்டிய கட்சி கையை விரித்தது.

எவ்வளவு காலத்திற்குத்தான் கொட்ட கொட்ட குனிந்து கொண்டே இருப்பது. அரசாங்க சார்பற்ற ஒரு சில இயக்கங்களின் தலைவர்களின் தூர நோக்குச் சிந்தனையின் முன்னேற்றத்தின் அறிகுறியே இந்தப் பேரணி.

ஒவ்வொரு மலேசிய இந்தியனுக்குப் ரிம 7 மில்லியன் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் அதை முன் வைத்து நமது நோக்கங்கள் இன்று உலக முழுவதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 ஆண்டுகளாக இந்த மண்ணில் இருந்தும் உரிமை மறுக்கப்பட்டே வருகிறது. ஆனால் அண்டை நாட்டிலுள்ளவர்கள் திருட்டுத்தனமாக இங்கே நுழைந்து, ஒரு மதத்தின் காரணமாகப் பல இலட்சம் பேர் இந்நாட்டின் பிரஜாவுரிமை பெற்று, பெரும்பாலானோர் பூமிபுத்ரா தரமும் பெற்றுவிட்டனர்.

ஆனால், இந்தியர்களைப்போல் கடசான், ரூசுன், டாயாக், இபாசன், பிசாயா ஆகியோர் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நமது அரசாங்கம் தனது கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வரவில்லை என்றால் இனி மோதல்கள் மட்டுமல்ல, மீண்டும் சபாவும் சரவாவும் தனியாகப் பிரிந்து போவதைத் தடுக்க முடியாது.

பூமிபுத்ராக்களின் உரிமையை யாரும் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் இதுதான் பதிலளிக்கும் என்று கிரீஸ் கத்தியை அம்னோ மாநாட்டில் சுழற்றப்பட்டது. வீரமான செயல் அல்ல. மற்ற இனங்களுக்காக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

மதம் இனம் என்று பிரித்தாள்வதைவிட, மனிதத் தன்மையுடன் இணைந்து வாழும் கொள்கைகளை அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும்.

எல்லா நிலைகளிலும் சமத்துவத்தை நிலைநிறுத்தி திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து நமது மலேசியாவை உலக அரங் கில் நிலை நிறுத்த வேண்டும்.

பாரிசான் நேசனில் உறுப் புக்கட்சி என்ற காரணத்துக் காக அம்னோ பிடித்த அணிலுக்கு நான்கு கால்கள் தாம் என்று தெரிந்தும் முன்று கால்கள்தாம் உள்ளன என்று சொன்னால் ஆமாம் என்று தான் தலையாட்ட வேண்டும், எதிர்க்கக்கூடாது என்று நிலை இருந்தால் இந்நாட் டில் என்றுமே நல்லாட்சி அமையாது.

பாவம் சோதிநாதன் - தேவமணி.

உண்மையிலேயே சமுதாயத்திற்குச் சேவை செய்ய நினைப்பவர்கள் ஆளும் கட்சியில் தங்களின் நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் தன் பதவியைப் பாதுகாக்க வாலை ஆட்டிக் கொண்டு இருப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. இருந்தாலும் நாம் ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று உலக நிலையில் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த அரசாங்கம் இந்திய சமுதாயத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட வாய்ப்புகளைக் கொடுக்கத் தவறுமாயின் மஇகாவை தேசியக் கட்சியிலிருந்து வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தலைவர் சொன்னதை இந்த சமுதாயம் மறந்திருக்காது.

இன்றைய சூழ்நிலையில் மஇகா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளத் தவறுமானால் இந்த சமுதாயம் நல்லதொரு பாடம் கற்றுக் கொடுக்கக் காத்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

© 2007    செம்பருத்தி பதிப்பகம், கோலாலம்பூர்   -    இயக்கம் :  மொழிநெட்     -  semparuthi@gmail.com