ஒரு போராட்டத்தின் சக்திகள் வந்தனர்! வென்றனர்! சென்றனர்!
ப. கந்தசாமி

 

அது ஒரு சங்கமம்; ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், சாமானியர்கள், பட்டதாரிகள், பெண்கள் முதியவர்கள், பெரும்பாலும் இளைஞர்கள், ஒரு சில சீன, மலாய் நண்பர்கள்.

 

 

பல திசைகளிலிருந்தும் திரண்டனர். பலர் பல மைல்கள் நடந்தே வந்தனர். இடம் தெரியாது சுற்றிச் சுற்றித் தேடி அலைந்து வந்து சேர்ந்தனர், ஆயிரக்கணக்கில்.

காவற்துறையினரின் கெடுபிடிகளையும் தடுப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மீறி இரவோடு இரவாக சங்கமித்தனர்.

அது ஒரு நீண்ட பயணம். எதிர்காலத்திற்காக இன்று போராடாவிடில் நாளைய சந்ததியினர் வாழ்வு பாழாகிவிடும் என்பதற்காக.

எதிர்ப்பு அலைகளின் சங்கமும். அன்றாடம் ஏற்பட்ட கொடூரமான அவமானங்களும், ஒதுக்கல்களும் இன புறக்கணிப்புகளும் சமூக பொருளாதார சீரழிவுகளும் ஏமாற்றங்களாக உருவெடுத்த பேரதிர்வுகள் அவை.

 

 

 

ஒரே ரீதியான, ஒளிமயமான, சமத்துவமான தொடக்கத்தின் சங்கமம்தான்.

25 நவம்பர் 2007இல் நடந்த பேரணி கட்டமைக்கப்பட்ட அடிமைத்தனத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.

அடுத்து நாம் எல்லா ஒடுக்கப்பட்ட மலேசிய இன பிரிவினர்களுடன் ஒன்று சேர்ந்து உண்மையான மலேசிய சனநாயகத்தைத் தோற்றுவிக்க நாம் உடனடியாக முயலவேண்டும்.

அன்று நடந்த பேரணி இந்தியர்களுக்கு மட்டும் உரித்தது அன்று.

அல்லாவிடில் நாம் தனிமைப்பட்டு மீண்டும் ஓரங்கட்டப்படுவோம். நாம் மீண்டுமொரு 50 ஆண்டுக்கால சரிவை எதிர்நோக்க நேரிடும்.

ஆக நாம் மலேசியாவில் நிலவும் இனவாத கொள்கையை நிராகரிப்போம். ஏனென்றால் அது நம்மை பகைமை உணர்வை ஊட்டி இனங்களுக்கிடையே பிரிவினையை வளர்க்கும். முன்பு காலனித்துவாதிகளால் பயன்படுத்திய பிரித்தாளும் சூழ்ச்சியைப் போல்.

இங்கு இந்தியர்கள் பல்லின மக்கள் மத்தில் வாழ்கிறோம். சாமானிய மலாய், சீன இனத்தவர்கள் நம்முடைய ஆதகங்களைப் புரிந்து கொள்வார்கள்; ஆதரிப்பார்கள்.

அவர்களின் சக்தியும் நமக்குத் தேவை.

ஆக, இன்னொரு நீதியான சங்கமத்தை நோக்கி நாம் உடனடியாகச் செயல்படுவதே விவேகம்.

© 2007    செம்பருத்தி பதிப்பகம், கோலாலம்பூர்   -     இயக்கம் :  மொழிநெட்     -  semparuthi@gmail.com